அமெரிக்கா மன்னி

ராஜம் .... என்று அழைத்தவாறே உள்ளே வந்தார் சங்கரன். நம்ம ஜானகிக்கு ஒரு வரன் தரகர் குடுத்தாரோன்னோ அது நன்னா பொருந்தி இருக்காம். மாப்பிள்ளை அமெரிக்காவிலே கம்பியுடர் கம்பனிலே வேலை பார்கிறானாம். இருபத்திநாலு வயதுதானாம். மாசம் 9000 டாலர் சம்பளம். ஒன்னோட புள்ளைக்கு மெயில் எழுதி விவரம் சொல்லிடறேன்.  மாப்பிள்ளையும்  கூட   டல்லாஸ்லெ தான் வேலை பார்க்கிறார், அதாலே அவனை ஒரு எட்டு போய பார்த்துட்டு வாடான்னு சொல்லலாம்னு நினைக்கறேன். என்ன சரியா என்று சங்கரன் சொன்னதும் ராஜம் தலை ஆட்டினாள். சங்கரனுக்கு ஒரு மகள் ஒரு மகன், பெயர் சேகர்.. படித்துவிட்டு கலியாணம் ஆன கையோடு தன மனைவீ சுமதியுடன் அமெரிக்காவில் வேலை பார்க்க சென்றுவிட்டான். எட்டு வருடங்கள் ஆகியும் தாயகம் வரும் வாய்ப்பே இல்லை.

சேகருக்கு திருமணம் ஆன போது. ஜானகிக்கு 14 வயது. மன்னி மன்னி என்று சுற்றி வரும் அவளை சுமதிக்கு மிகவும் பிடித்துவிட்டதில் ஆச்சரியம் இல்லை. இன்ஜினீயரிங்  கோர்ஸ் முடித்துவிட்டு அமெரிக்காவிலேயே தானும் ஒரு வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஜானகி விரும்புவது சுமதிக்கு தெரியும். பெண் பார்க்க மாப்பிள்ளை ராஜீவ் ஞாயிற்றுக்கிழமை வருவதாக ஏற்பாடு. ஞாயிறன்று சமையல் வேளையில் முழுகியிருந்த ராஜம் காலிங் பெல் சப்தம் கேட்டு ஓடிப்போய் கதவை திறந்தாள். கையில் காய்கறிகள் மற்றும் இதர சாமான்களுடன் நின்ற சங்கரனை பார்த்தவுடன், “ஏன்னா, ஜானகியை கூட்டிண்டு போயிருக்கலாமே "என்று அவர் கையில் இருந்து சாமான்களை தன கையில் வாங்கி உள்ளே சென்றாள். மாலை ஆறு மணிக்கு மாப்பிள்ளை வீட்டார் வந்து இறங்கினர். ராஜிவ் நல்ல உடற்கட்டுடன் மிக நிறமாகவும் இருந்ததை கண்டு சங்கரனும் ராஜமும் மிக மகிழ்ந்தனர். காபி டிபன் கொடுக்கும் சாக்கில் ஜானகியும் ராஜிவ் பக்கம் ஒரு பார்வையை விட்டு தன்னுடைய சம்மதமும் சொன்னவுடன் சங்கரன் மற்ற விஷயங்களை பேசத்தொடங்கினார். ஒரு நகை கடையைப்போல் இருந்த மாப்பிளையின் தாயார் கேட்ட எல்லா அயிட்டங்களுக்கும் ஓகே ஓகே என்று கூறிய சங்கரன் கடைசியாக சொன்ன 100 பவுன் கொஞ்சம் கவலையை அளித்தது. ரிடையர் ஆன பின் பி எப், க்ராசுவிடி  என்று வந்த பணத்தில் தான் அன்றாட ஜீவனத்திற்கென்று ஒரு பெரும் பகுதியை முதலீடு செய்திருந்தார். ஜானகியின் திருமண செலவிற்கு என்று வைத்திருந்த தொகையில் இந்த நூறு பவுன் கொடுப்பது முடியாது என்று சங்கரனுக்கு கண்டிப்பாக தோன்றவே மனம் குழம்பினார். சங்கரனின் குழப்பத்தை கண்ட ராஜம், "ஏன்னா, நூறு பவுன் சித்தே கஷ்டம்னு யோசிக்கறேளா" என்று காதை கடித்தாள். இல்லை, சேகரிடம் கேட்டு ஏற்பாடு செய்துவிடலாம், கவலைப்படாதே என்றவாறு மாப்பிள்ளை வீட்டாரிடம் சம்மதம் என்று கூறிய சங்கரன் வாயில் வரை சென்று வழி அனுப்பிவிட்டு உள்ளே வந்தார். விவரமாக எல்லா விவரங்களையும் சேகருக்கு ஈமெயில் செய்துவிட்டு சற்று ஆசுவாசமாக உட்கார்ந்தவரை பார்த்து ராஜம், "ஏன்னா கொஞ்சம் அதிகம்னு தோணலையா உங்களுக்கு" என்றாள். "நல்ல படிப்பு, நல்ல வேலை, வெளிநாட்டு உத்யோகம்னா கொஞ்சம் அதிகம்தான் ஆகும்னு தெரியாதா" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சங்கரன்.

ஈமெயில் எழுதி பதினைந்து நாட்கள் ஆகியும் சேகரோ அல்லது சுமதியோ பதில் போடாதது ராஜத்திற்கு கவலை அளித்தது. ஜானகியின் மேல் பாசம் கொண்ட சுமதி இப்படி என் பதில் போடாமல் இருக்கிறாள் என்று புரியாத ராஜம், "நீங்கள் ஒரு முறை போனில் பேசி பாருங்களேன்" என்றாள். போனில் பேசிய சங்கரனிடம், " அப்பா நீங்கள் எழுதிய ஈமெயிலை பார்த்தோம் ஆனா கொஞ்சம் அதிகம்னு தோணலையா உங்களுக்கு. அதுவும் இப்ப இருக்கற சிச்சுவேஷன்லே இத்தனை பெரிய தொகைய புரட்டறது கஷ்டம்னு ...." இழுத்த சேகரிடம் ஒன்னும் சொல்ல தோன்றாமல், " சரி நீ பார்த்து எது சரீன்னு படறதோ அப்படி செய்" என்று போனை வைத்தார். நல்ல வரனை சில லட்சங்களுக்காக விடுவதா அல்லது வேறென்ன ஏற்பாடு செய்வதென்று தோன்றாமல் குழம்பிய சங்கரன், " ராஜம் இந்த பணம் சேகருக்கு ஒரு பெரிய தொகையே இல்லேன்னு எனக்கு தெரியும். அவன் ஏன் அப்படி சொன்னான்னு தான் புரியலை" என, ராஜம் " சுமதிக்கு ஜானுனா உயிராச்சே, அவளும் இத்தனை நல்ல வரன் வரும்போது இப்படி ஏன் இருக்கா" என்று கவலையுற்றாள். "சரி, நான் மாப்பிள்ளை காறாள்கிட்டே எங்களால் இயலாதுன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டு வரேன் " என்று புறப்பட்ட சங்கரனை பார்த்து கண்ணீர் விட்டாள் ராஜம்.

இதற்க்கு நடுவில் கனவுலகில் மிதந்து கொண்டிருந்த ஜானகிக்கு அண்ணனும் அண்ணியும் இப்படி நடந்து கொண்ட விதம் அதிர்ச்சியாக இருந்தது. மனம் வெதும்பி அழுதவளை தேற்றினாள் ராஜம். பதினைந்து நாட்கள் கடந்தபின் திடீரென்று அண்ணனும் மன்னியும் வாசலில் காரில் இருந்து இறங்குவதை கண்ட ஜானகிக்கும் ராஜத்திற்கும் ஒன்றுமே புரிய வில்லை. தூங்கிக் கொண்டிருந்த சங்கரனை எழுப்பிய ராஜம் " வா சேகர், வா சுமதி என்ன செய்தி கூட இல்லாமே சர்ப்ரைஸ் ! " என்று வரவேற்றாள். "ஜானு! " என்று அழைத்தவாறே உள்ளே வந்த சுமதியை ஓடிச்சென்று அணைத்துக்கொண்டாள் ஜானகி. சாப்பிட்டு விட்டு அமர்ந்து கொண்ட தாயிடம் "அம்மா நான் பணம் ஏற்பாடு செய்யாதது உனக்கும் அப்பாவுக்கும் சற்று ஏமாற்றமாகத்தான் இருந்தது இல்லையா"  என்ற சேகரிடம் , "அப்படியெல்லாம் இல்லைடா, உன்னால் முடிந்தா நீ நிச்சயம் செய்வே என்று எங்களுக்கு தெரியும். எதோ ஒரு தவிர்க்க முடியாத காரணம் தான் நீ அப்படி நடந்து கிட்டேன்னு அப்பா சொன்னார். அதான் உடனே இந்த வரன் வேண்டாம்னு சொல்லிட்டோம்." என்றாள் ராஜம். அம்மா என்று அவளை கட்டிக்கொண்ட சுமதி, " நாங்கள் ஈமெயில் பார்த்தவுடன் மாப்பிள்ளையை பற்றி விசாரித்தோம். அவருக்கு பல கெட்ட பழக்கங்கள் இருப்பதாகவும், அமெரிக்காவிலேயே ஒரு பெண்ணுடன் பழகுவதாகவும் அறிந்தோம். இதை உங்களிடம் நேராக சொல்ல சற்று யோசித்தோம்." என்றாள். அதிந்து போன சங்கரனும் ராஜமும் "நல்ல வேளை  இந்த வரனை வேண்டாமென்று விட்டது." என்று நினைத்தனர். அருகில் இருந்த ஜானகி மட்டும் சோகமாய் இருப்பது கண்ட சுமதி புன்முறுவல் பூத்தவளாய் "ஏய் ஜானு, இந்த போடோவை கொஞ்சம் பார்த்து எப்படி இருக்குன்னு சொல்லேன்" என்றாள். போட்டோவை கையில் வாங்கி பார்த்துவிட்டு ,"யாரு மன்னி இது ஹிந்தி பட ஹீரோ மாதிரி நல்ல நிறமா படு ஸ்மார்டாக இருக்காரே !"என்ற ஜானகியிடம் "இவர் வாஷிங்கடனில் பெரிய வேலையில் இருக்கார். இந்தியாவிலே இன்ஜினியரிங் பண்ணின பொண்ணு தான் வேணுமாம், பண்ணிக்கறயா" என்று கண் சிமிட்டினாள் சுமதி. ஒன்றும் புரியாமல் குழம்பிய ஜானகியிடம் தன கசின் ராகவ் ஐ ஐ டி மதராஸில் படித்து இப்போ அமெரிக்காவிலே இருப்பதாகவும் ஜானகியின் போட்டோவை தங்கள் ஆல்பத்தில் பார்த்ததில் இருந்து அவளைத்தான் திருமணம் செய்வேன் என்று சொன்னதையும் சொல்ல, சுமதியை கட்டி பிடித்தபடி குழந்தை போல தேம்பினாள் ஜானகி. … Adorable Sister-in-Law

Write a comment ...

Write a comment ...